Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

ULFA attacks force migrant labourers to flee Assam – Toll reaches 68

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 8, 2007

உல்ஃபா கொலைவெறித் தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்: பிகார் மாநில மக்கள்

குவாஹாட்டி, ஜன. 9: அசாமில் குடியிருந்துவரும் பிற மாநில மக்கள் மீது உல்ஃபா (ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதை அடுத்து பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் அசாமை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

“”எங்கள் மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அசாமை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டோம்” என்று கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பிகாரைச் சேர்ந்த மக்கள் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறினர்.

மேல் அசாமில் உள்ள திப்ரூகர், தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்து உல்ஃபா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் செங்கல்சூளையில் பணியாற்றும் பிகாரிகள், பால் வியாபாரம் செய்துவரும் அப்பாவிகள் உள்ளிட்ட 64 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையில் மத்தியக் குழுவினர் அசாம் வந்தனர். முதல்வர் தருண் கோகோய், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் வாழும் இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே மீண்டும் உல்ஃபா பயங்கரவாதிகள் திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசித்துவந்த 17 பிகாரிகளைக் கொன்று குவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் உறுதி அளித்த பிறகும் உல்ஃபாவின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்காததால் தின்சுகியா, திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பிகாரிகள் வீடு வாசல்களைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலத்தை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் சாரி சாரியாக ரயில் நிலையங்களை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அசாமில் செங்கல்சூளை வேலை, பால் விற்பனை, சிறு சிறு கூலிவேலைகள் போன்றவற்றைச் செய்துவந்தவர்கள் அவர்கள்.

“”தின்சுகியா மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் லாங்ஸ்வால் கிராமத்துக்குள் இரவில் புகுந்த முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் எங்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்ற சம்பவம் எனது நினைவில் வந்து அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், உறக்கம்கூட வரவில்லை” என்று அச்சத்துடன் கூறினாள் 12 வயதுச் சிறுமி ராதா.

“”எங்களது பாதுகாப்பு குறித்து எங்கள் சொந்த ஊரில் உள்ள முதியோர் கவலை அடைந்துள்ளனர். அசாமிலிருந்து பிகாருக்குத் திரும்பி வந்துவிடுமாறு அவர்கள் கூறினர்; அதனால்தான் புறப்பட்டுவிட்டோம்” என்று குவாஹாட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரி யாதவ் என்பவர் கூறினார். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் அச்சத்தில் அசாமைவிட்டு வெளியேறவில்லை என்று மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரு பதில் -க்கு “ULFA attacks force migrant labourers to flee Assam – Toll reaches 68”

  1. bsubra சொன்னார்

    அசாமில் படுகொலைகள்

    நாட்டின் வடகிழக்குக் கோடியில் உள்ள அசாம் மாநிலத்தில் சுமார் 50 பேரை உல்ஃபா தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். அவர்கள் பாதுகாப்புப் படையினர்போல வேஷமிட்டுச் சென்று அப்பாவி மக்களைத் திரட்டி, அவர்களில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியே பிரித்து கொன்றுள்ளனர். இது அவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதைக் காட்டுகிறது.

    இப்படுகொலைகளைத் தொடர்ந்து அசாமுக்கு மத்திய துணை அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரக்குழு சென்றுள்ளது. இதை வெறும் ஆறுதல் நடவடிக்கையாகவே கருத முடியும். ஏனெனில் வருகிற மாதங்களில் இம்மாதிரியான செயல்கள் நடைபெறாதபடி இக் குழுவினரால் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை.

    பேச்சுவார்த்தை மூலமே உல்ஃபா பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும். அவ்விதம் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு எதையும் இப்போது காணோம். அசாமை தனிநாடாக்க வேண்டும் என்ற தங்களது பிரிவினை கோரிக்கை, பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என்று உல்ஃபா கோருகிறது. மத்திய அரசு அதை ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. பயங்கரவாதச் செயல்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முற்படுவோம் என உல்ஃபா இயக்கத்தினர் உறுதிமொழிக் கடிதம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துகிறது. ஆனால் உல்ஃபா இயக்கத்தினர் அதை ஏற்க மறுக்கின்றனர். தவிர, நேரடிப் பேச்சுகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

    புதிய ஆண்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று அண்மையில்தான் உல்ஃபா இயக்கத் தலைவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த உல்ஃபா தயாராக இல்லை என்பதையே இப்போதைய படுகொலைகள் காட்டுகின்றன. உல்ஃபா இயக்கம் 1979-ல் தோன்றியதாகும். வங்க தேசத்திலிருந்து அசாமில் கள்ளக் குடியேற்றம் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது ஆரம்பத்தில் அவர்களது முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அசாமை மத்திய அரசு உதாசீனம் செய்வதாகவும் அது கூறியது. இந்த இரண்டுமே மக்களிடையே ஆதரவைத் தேடிக் கொடுத்தன. ஆனால் அதே உல்ஃபா இயக்கத்தின் தலைவர்கள் இன்று வங்க தேசத்தின் அரவணைப்பில் உள்ளனர். ஆயுதங்களைப் பெறவும் ஆயுதப் பயிற்சி பெறவும் வங்க தேசத்தின் உதவியை அவர்கள் நம்பி நிற்பவர்களாகி விட்டனர்.

    வங்க தேசத்தில் உல்ஃபா பயிற்சி முகாம்கள் பலவும் உள்ளன. இவ்வித முகாம்கள் பூடான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் இருந்தன. ஆனால் அந்த இரண்டு நாடுகளின் அரசுகளும் இந்த முகாம்கள் மீது நடவடிக்கை எடுத்து மூடும்படிச் செய்துவிட்டன. ஆனால் வங்க தேசம் இது விஷயத்தில், இந்தியாவுடன், ஒத்துழைப்பதாக இல்லை.

    அசாமில் கள்ளக் குடியேறிகள் பிரச்சினை இன்னும் தீரவில்லை. வங்கதேச கள்ளக் குடியேறிகளை வோட்டு வங்கியாக மாற்றுவதில் காங்கிரஸ் முனைப்பாக இருந்து வந்துள்ளது. தவிரவும் அசாமில் பல வளங்கள் இருந்தும் அது பெரிய அளவில் முன்னேறவில்லை. அசாமை ஆண்ட பல அரசுகளே இதற்குக் காரணம். எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றுப்பூர்வமான காரணமும் உண்டு.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலமும் மற்றும் சில மாநிலங்களும் வங்காளம் என்ற பெரிய மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அக்காலகட்டத்தில் அசாமின் நிர்வாகத்திலும் பொருளாதாரத்திலும் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால் பிற மாநிலத்தவர் மீது அசாம் மக்களிடையே எதிர்ப்பு உணர்ச்சி தோன்றியது.

    அசாம் முன்னேறாததற்கு பிற மாநிலத்தவரும் மத்திய அரசும் காரணம் என்ற தவறான எண்ணமும் வேரூன்றியது. இப்படியான பல காரணங்களால் அசாம் மக்களிடமிருந்து உல்ஃபா இயக்கத்தினரைத் தனிமைப்படுத்த இயலாமல் போய்விட்டது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு உல்ஃபா தீவிரவாதிகள் பிற மாநிலத்தவரைத் தேர்ந்தெடுத்து கொலை செய்துள்ளதாகக் கூறலாம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>