Poo Aalalasundaranaar – Tamil Scholar’s Anniversary : Bioskectch
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 17, 2006
சிவநெறிச்செல்வரின் நூற்றாண்டு
மு.அ. மாணிக்க வேலு
இருபதாம் நூற்றாண்டில் தோன்றி, தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியோர்களுள் ஒருவர் பேராசிரியர் பூ. ஆலாலசுந்தரனார். அவர் வேலு செட்டியாருக்கும் இராசம்மாளுக்கும் 1907-ம் ஆண்டு நவம்பர்த் திங்கள் ஐந்தாம் நாள் மகனாகப் பிறந்தார்; சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் 1917-ம் ஆண்டு முதல் 1927-ம் ஆண்டு வரை படித்தார்.
அவர் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரியில் 1927 முதல் 1929 வரை படித்து, இடைநிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றார். முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா, அப்பாண்டை ராஜன், நடேசன் முதலியோர் அவருடன் படித்த தோழர்கள் ஆவர்.
அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைத் தமிழ்ப் பிரிவு தொடங்கப்படவில்லை. அப்பொழுது கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பி பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க, அவருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.
அவர் தமிழ் படிக்க விரும்பி வந்ததைப் பாராட்டி, உதவித்தொகைகளை வழங்கினார் இராஜா சர் எம்.ஏ . முத்தையா செட்டியார். ஆலாலசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1932-ம் ஆண்டில் தமிழ்ப் பேரவையின் செயலாளராகப் பணியாற்றினார்; 1932-33-ம் ஆண்டில் அப் பல்கலைக் கழகப் பேரவையின் இரண்டாம் பருவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1934-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார்; அதன் வாயிலாக, 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.
சென்னைக் கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், அவரை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராக நியமித்தார். அக்காலத்தில் கிறித்துவ உயர்நிலைப் பள்ளியும், கிறித்துவக் கல்லூரியும் ஒரே கட்டடத்தில், சென்னை முத்தியாலுப்பேட்டை லிங்கிச் செட்டித் தெருவில் இருந்தன. மொழியாசிரியர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் பாடம் நடத்தினர். ஆதலால், ஆலாலசுந்தரனார் கல்லூரி இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்பித்து வந்தார்.
1937-ம் ஆண்டு கிறித்துவக் கல்லூரி தாம்பரத்திலுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அப்பொழுது பேராசிரியரும் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டார். அவர் 1951-ம் ஆண்டு தமிழ்த்துறைத் தலைவர் பதவியும் தமிழ்ப் பேராசிரியர் பதவியும் பெற்றார்; 1964-ம் ஆண்டிலிருந்து 1968-ம் ஆண்டுவரை மொழித்துறைத் தலைவராகத் தொண்டாற்றினார்; 1968-ம் ஆண்டிலிருந்து 1973-ம் ஆண்டுவரை, இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழுவின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார்; 1973-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அதே கல்லூரியில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றினார்.
அவர், இயற்றமிழ், கட்டுரை விருந்து, சுந்தரச் சொல்லோவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர்; சென்னை கந்தகோட்டத் தலபுராணத்திற்கு உரையாசிரியர்; 80-க்கும் மேற்பட்ட மலர்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன; கிண்டியில் உள்ள கல்லூரி மாணவர் இலவச விடுதியில் ஞாயிறுதோறும் திருக்குறள், திருவாசகம், கந்தரனுபூதி முதலியவை பற்றி 15 ஆண்டுகள் தொடர்ந்து வகுப்பு நடத்தினார். தமிழக ஆளுநர் மைசூர் அரசர் ஜெயசாமராஜ உடையாருக்கு தமிழ் கற்பித்தார்.
பேராசிரியர் ஒவ்வோர் ஆண்டும் ஆனித் திருமஞ்சனத்தன்றும், மார்கழித் திருவாதிரையன்றும் சிதம்பரம் சென்று, நடராசப் பெருமானை வழிபட்டு வருவார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்று, இறைவனை வணங்கி வந்தார்.
அவர் 1982-ம் ஆண்டு மார்கழித் திருவாதிரைக்குச் சிதம்பரம் சென்று கடைசி முறையாக நடராசப் பெருமானை வணங்கி வருகிறேன்; அதன்பிறகு, பார்வைக்குறைவினால் செல்ல இயலாது என்று கூறிச் சென்றார்.
மார்கழித் திருவாதிரையன்று காலை சிதம்பரம் கோயிலுக்குச் சென்று நடராசப் பெருமானின் அபிஷேகத்தைத் தரிசித்துவிட்டு, அங்கு தாம் தங்கும் செ. ரெத்தினசாமி செட்டியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்; சென்ற சில நிமிடங்களில் மார்பு வலிக்கிறது என்று கூறியுள்ளார்; ஆனால், மருத்துவர் வருவதற்குள் இறைவன் திருவடியைச் சென்று சேர்ந்து விட்டார் பேராசிரியர்.
அவர் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கிலம் – தமிழ் அகராதியினைத் தொகுத்த அறிவுரைக் குழுவின் உறுப்பினராக 1961லிருந்து பணியாற்றினார்; 1970 முதல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தக் குழுவின் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர் அவர். நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இத்தருணத்தில் அவருடைய கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்து, நாமும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.
இந்த இடுகை இடப்பட்ட நாள் நவம்பர் 17, 2006 இல் 1:09 மு.பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது Aalalasundaranaar, Aanmikam, Anna, Annamalai University, Anniversary, Bioskectch, Chidambaram, Literature, MA Muthiah, MCC, Madras Christian College, Memoirs, Pachaiyappa, Scriptures, Tamil Scholar, UGC. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
