Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

M Karunanidhi : ‘No injustice to Alliance partners in the TN civic elections’

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 30, 2006

கூட்டணி கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை: கருணாநிதி

சென்னை, அக். 30: பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவால் தோற்கடிக்கப்பட்ட இடங்கள் என்று ஒரு பட்டியல் பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான இடங்களில் பாமகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் பாமக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாமக வேட்பாளர்களைத் தோற்கடிப்பது தான் திமுகவின் நோக்கம் என்றால் காஞ்சிபுரம் தவிர்த்த கடலூர், தருமபுரி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 இடங்களிலும் அதாவது ஐந்தில் 4 மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக பாமகவினர் தான் திமுக கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 14, அதிமுக 8, காங்கிரஸ் 5 இடங்களிலும் பாமக ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. திமுக 14 இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதிலும் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில் அவர்களுக்கே அந்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே போட்டி திமுக வேட்பாளர் ஒருவர் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல் திமுகவில் உள்ள ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம். அப்படி செயல்பட்டவர்கள் மீது தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே பாமக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி. ராமசாமி ஆகியோர் மீதும் மற்றும் ஒன்றியச் செயலர்கள், வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் உள்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து அவர்களை நீக்க முடிவெடுத்து அனைத்து பத்திரிகையிலும் அச் செய்தி வெளிவந்திருக்கிறது.

காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆறுமுகம் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவரது தோல்விக்கு பாமகவும் தான் காரணம் என்று கூறப்பட்டாலும்கூட நான் ஏட்டிக்குப் போட்டியாக அவ்வாறு குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.

திண்டிவனம் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திமுகவைச் சேர்ந்த பூபாலன் சுயேச்சையாகப் போட்டியிட்டார் என்பதற்காக கட்சியிலிருந்து அவரை நீக்க முயற்சி எடுத்துக் கொண்ட நிலையில் அவரை பாமக தங்கள் கட்சியில் உறுப்பினராக ஆக்கி கொண்டது. திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட இருந்த பாமகவை தோற்கடித்த பூபாலனை பாமகவில் சேர்த்துக் கொண்டு அவரைத் தான் தற்போது பாமக வேட்பாளராக நிறுத்தி அவருக்கே திமுக உறுப்பினர்கள் எல்லாம் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். இந் நிலையில் முதலில் விடுதலைச் சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் நகராட்சி அவர்களுக்குத் தர இயலாமல் போய்விட்டது.

எனவே கூட்டணியின் வெற்றிக்காகவும் அவர்களின் நியாயத்துக்காகவும் திமுக எந்தக் காலத்திலும் தவறு செய்யாது. ஒரு மிகப் பெரிய தேர்தலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓரிருவர் தவறு செய்வதை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர உடனடியாக அறிக்கை வாயிலாக திமுக எங்களை தோற்கடித்துவிட்டது என்பதைப் போல செய்தி வெளியிட்டு இரு கட்சி தோழர்களிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்த முயல்வது நல்லதல்ல. இந்த அறிக்கைகூட ஒரு விளக்கமாகத் தரப்படுகிறதே தவிர கூட்டணிக் கட்சியினர் யாரையும் விமர்சிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு வெளியிடப்படும் ஒன்றல்ல.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

2 பதில்கள் -க்கு “M Karunanidhi : ‘No injustice to Alliance partners in the TN civic elections’”

  1. bsubra சொன்னார்

    சென்னை துணை மேயர் தலித் பெண் வேட்பாளரை பா.ம.க. ஏற்கவில்லை: ராமதாஸ் புகாருக்கு கருணாநிதி பதில்

    இன்னொரு கட்சியில் அதுவும் குறிப்பாகக் கூட்டணிக் கட்சியில் சென்னை துணை மேயருக்கான வேட்பாளர் யார் என்பதை தி.மு.க. தலைவரே நிர்ணயிப்பதாப என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் நியாயமானது தான்.

    அப்படி தோழமைக் கட்சி ஒன்றின் மீது நான் அதிகாரம் செலுத்திடவோ, ஒரு பதவி பெற்றுத் தரவோ உரிமை இருப்பதாக எண்ணி, அந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தால், அது தவறு தான். ஆனால் நடந்தது என்ன என்பதை நான் விளக்கினால், மற்றொரு கட்சியின் வேட்பா ளர் பிரச்சினையில் நான் தலையிட்டதாகக் கூறப்படும் பழிச்சொல் நீங்கும் என்று நம்புகிறேன்.

    சென்னை துணை மேயர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமென்று டாக்டர் அய்யா எனக்கு கடிதம் அனுப்பினார்.

    அந்தப் பதவிக்கு தி.மு.க. சார்பில் சத்யபாபா என்ற ஒரு `தலித்’ பெண்மணியை சென்னையிலே உள்ள மக்கள் தொகையில் கணிச மான பகுதியினர் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் என்ற அடிப்படை யில் ஏற்கனவே பத்திரிகை களில் அறிவித்து விட்ட காரணத்தால் அவரைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லும் போது, அந்த இடத்தில் வேறொரு “தலித்” பெண்மணியை பா.ம.க. சார்பில் நிறுத்துவது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் பிரச்சினையும் வராது என்றும் யோசனை சொன்னேன்.

    அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து அப்படியானால் துணை மேயர் பதவியே வேண்டாமென்ற பதில்தான் வந்தது. நடந்தது இப்படியிருக்க நான் ஒரு வேட்பாளரை பா.ம.க. மீது திணித்ததாக பழி கூறுவதில் ஒரு சிறிதளவும் உண்மை இல்லையென்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

  2. Bala சொன்னார்

    கருணாநிதி இவ்வாறு கூறினாலும், தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் சுமார் 30 முதல் 50 சதவீத இடங்களில் திமுகவினர் திட்டமிட்டு பாமக வேட்பாளர்களை தோற்கடித்ததாக ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் கோ.க.மணி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>