Sonia wants Madhya Pradesh govt employees out of RSS
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 29, 2006
ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்
புதுதில்லி, செப்.29:ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ம.பி. அரசின் இது தொடர்பான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சோனியா காந்தியின் இக்கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வியாழக்கிழமை அளித்தது.
கடிதத்தில் சோனியா கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேச அரசின் நடவடிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. மாநில ஆளுநருக்கு தெரியாமலேயே அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுத்துள்ளது.
இது தேசநலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. முறையற்ற சட்டவிரோதமான ம.பி.அரசின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்று சோனியா கூறியுள்ளார்.
கலாமை சந்தித்த காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மார்க்ரெட் ஆல்வா, அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இடம் பெற்றனர்.
