MiG-29 crashes in Ambala, pilot safe
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 29, 2006
ஹரியாணாவில் படைவிமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிர் தப்பினார்
அம்பாலா(ஹரியாணா), செப். 29: இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிக்-29 ரக விமானம் ஒன்று ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.
விமானம் ஒரு வயலில் விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 12 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அங்கிருந்த ஒரு டிராக்டர், விமானம் மோதியதில் சேதமுற்றது.
வழக்கமான சோதனைக்காக விமானி நாயக் என்பவர் விமானத்தை ஓட்டிச் சென்றார். விமானம் விபத்துக்குள்ளான போது அவர் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பினார். பின்னர் அவர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
விமானத்தின் உடைந்த பகுதிகள் அப்பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கீழே விழுந்த இடத்தில் 10 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்
இந்த மிக்-29 ரக விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். அம்பாலா விமானப்படைத் தளத்திலிருந்து இது புறப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
