Maanpumigu Manithargal – Chinnapullai
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 29, 2006
பெ. கருணாகரன், ப. திருமலை.
டெல்லி… ஸ்ரீசக்தி டிரஸ்கார் விருது வழங்கும் விழா. அந்தப் பெண்ணின் பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் மேடையேறி அங்கிருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயைக் கும்பிட்டார். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத சம்பவம். வாஜ்பாய் அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கினார்.
பிரதமர் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பெண் _ சின்னப்பிள்ளை. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவிளக்கு ஏற்றியவர்.
மதுரை மாவட்டம் சுள்ளந்திரி கிராமம்தான் சின்னப்பிள்ளை பிறந்த ஊர். அப்பா, பெரியாம்பாளை. அம்மா, பெருமி. தாழ்த்தப்பட்ட சமுதாய விவசாயக்கூலிகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். கடைசி வாரிசுதான் சின்னப்பிள்ளை. இவருக்கு மூன்று வயதிலிருக்கும்போது, அம்மா இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமலே நான்கு பேரையும் பெரியாம்பாளை வளர்த்திருக்கிறார்.
வசதியில்லாததால் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை. நான்கு வாரிசுகளுக்கும் விவசாயக் கூலி வேலைதான். ஏழு வயதிலேயே சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை.
திருமணம்!
பத்து வயதில் பெரிய மனுஷி; பன்னிரண்டு வயதில் திருமணம். கணவர் பெருமாள் _ தாய்வழி உறவு. இவருக்கும் விவசாயத் தொழில்தான்.
இரண்டு குழந்தைகள் பிறந்தநிலையில் கணவருக்குத் தீராத வயிற்றுவலி. வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்தச் சூழலில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமாகிவிட, குடும்பச்சுமை சின்னப்பிள்ளையின் மீது.
அசரவில்லை. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். கடுமையாய் உழைத்தார். ஆனால், வருகிற கூலியெல்லாம் கணவரின் வைத்திய செலவுக்கே போனது.
வர்க்கப் பார்வை!
வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபிறகு, இவருக்குள் வர்க்கப் பார்வை தலைதூக்கியது. விவசாயக் கூலிகளின் சிக்கல்களை உணர்ந்தார். செய்த வேலைக்கு சரியான கூலி கிடைக்காதது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லாத நிலை. இதைச் சரி செய்யவேண்டும் என்ற கோபமும், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும் அவரை தினமும் துன்புறுத்தின. விளைவு… அவருக்குள் அதற்கான திட்டங்கள் தோன்றின.
நில உடைமையாளர்களைச் சந்தித்தார். ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் நிலத்துக்குத் தேவையான ஆட்களை காண்ட்ராக்ட் முறையில் மொத்தமாகப் பேசி, பலருக்கும் வேலையைப் பகிர்ந்தளித்தார். நிலவுடைமையாளர்களிடம் கண்டிப்பாகப் பேசி, கூலியை நியாயமாய் வாங்கிக் கொடுத்தார். வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோருக்கும் இவர் வேலை வழங்கத் தவறவில்லை. இதனால் மக்களுக்கு சின்னப்பிள்ளை மீது நம்பிக்கை வந்தது.
இந்த நேரத்தில்தான் மாதர் சங்கத்தினர் சிலர், மான்யத்துடன் வீடு வாங்கித் தருவதாகக் கூறி வந்தனர். சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாயக் கூலிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்தார்கள். ஆனால், கிடைத்தது வீடு அல்ல, ஏமாற்றம்தான்! பணம் கொடுத்தவர்களெல்லாம் சின்னப்பிள்ளை சொல்கிறாரே என்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள். இது சின்னப்பிள்ளைக்குப் பெரிய உறுத்தலாயிற்று.
சுய உதவி!
இந்த நிலையில்தான் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுக்களுடன் சின்னப்பிள்ளையை அணுகி, கடன், சுயஉதவிக் குழுக்கள் என பேசினார். ஏற்கெனவே ஏற்பட்ட ஏமாற்றத்தால் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் விடாமல் பேசிக்கொண்டேயிருக்கவே, சிறிது சிறிதாக அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால், மக்களிடம் சின்னப்பிள்ளையால் நம்பிக்கை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால், பில்லுச்சேரி கிராமத்தில் முதலில் துவங்கப்பட்ட சுயஉதவிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் பதினான்கு பேர் மட்டுமே.
இந்தக் குழுவினர் போட்ட பணம் இவர்களுக்குள்ளேயே சுழன்றது. தானம் அறக்கட்டளையின் நிதிஉதவியும் ஆலோசனையும் குழுவை மேலும் வலுவாக்கியது. சின்னப்பிள்ளைக்கு இந்தத் திட்டம் பிடித்துவிட, அக்கம் பக்கத்துக் கிராமத்து விவசாய பெண்களையும் திட்டத்துக்குள் இழுத்துப்போட ஆரம்பித்தார். சுயஉதவிக் குழுக்கள் கிராமத்துக்குக் கிராமம் வேர்விடத் தொடங்கின.
முதலில் பதினான்கு பேருக்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை, மூன்றே ஆண்டுகளில் முந்நூறு பேருக்குத் தலைவியானார். அடுத்த மூன்றாண்டுகளில் அது ஐந்தாயிரம் ஆனது. இவரது கடின உழைப்பு இவரை ஏழு மாநில களஞ்சிய சுயஉதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கியது. இந்தப் பொறுப்பு ஏழாண்டுகளுக்கு. இப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுநாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இந்தக் கூட்டமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று லட்சம்.
இவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தாலும் கூட, இவருக்கு இன்னும் எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் ஆச்சரியம். எப்படிச் சமாளிக்கிறாராம்? ‘‘வாசிக்கச் சொல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிடறேன். கணக்கு வழக்கு பார்க்க படிச்ச புள்ளைகளை வேலைக்கு வைச்சிருக்கேன். செக்கில் மட்டும்தான் நான் கையெழுத்துப் போடுவேன்…’’ என்கிறார். இவருக்கு இந்தியா முழுக்க பயணம் செய்த அனுபவமுண்டு.
தனக்குக் கிடைக்கும் விருதுகள், பணம் எதையும் தனக்காக இவர் வைத்துக்கொள்வதில்லை. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கொண்டு ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, சிறுசிறுமகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுகிறது.
சாதனை!
மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சாதித்ததென்ன? இவரிடமிருந்து பணிவாக பதில் வருகிறது. ‘‘கந்துவட்டியை அடியோடு ஒழிச்சுட்டோம்ல. நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு அதுக்கு வட்டியாக ஒரு மூட்டை நெல் அளந்து கொடுத்த அந்தக் காலம் மலையேறிடுச்சி. இப்ப எங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக்கிறதாலே அநியாய வட்டி என்கிற பேச்சுக்கே இடமில்லே… இது தவிர, மூணு வேளையும் வயிறார பட்டினியில்லாம எங்க பெண்கள் சாப்பிடறாங்க….
தவிர, எங்க குழுக்களில் சுயதொழிலை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்திக்கிட்டு வர்றோம்…’’
பெரிய தலைவியாகியும் வசதியாக வாழ வாய்ப்பிருந்தும் கூட, சின்னப்பிள்ளை இன்னும் கிராமத்திலேயேதான் இருக்கிறார். தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட சிறிய வீடுதான் இவர் குடியிருப்பது. அதைப் பெறவே இவர் போராட வேண்டியிருந்ததாம். இந்த வீட்டிலிருந்துதான் இவரது மக்கள் பணி தொடர்ந்து நடக்கிறது. ‘ரோடு இல்லை… ரேஷன் கார்டு இல்லை… விளக்கு எரியவில்லை…’ என்று மக்கள் குறைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
‘எங்க சனங்க பாவம்ங்க…. அவங்களுக்கு ஏதாவது செஞ்சுக் கொடுங்க…’ என்ற இவரது வெள்ளந்தியான பேச்சை அதிகாரிகளால் தட்ட முடிவதில்லை.
‘வாழ்க்கையிலே நம்மால அடுத்தவர்களுக்குப் பயன் இருக்கணும். நல்லது செஞ்சோம்கிற திருப்தி இருக்கணும். இதுதான் மனுஷ ஜென்மத்தின் முழுமையா இருக்கமுடியும்.’’ என்கிறார் அந்தக் கறுப்பு வைரம்.
_ பெ. கருணாகரன், ப. திருமலை.
