Congress & Communist Govt.’s Coordination Committee
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 26, 2006
ஒருங்கிணைப்புக் கமிட்டி
மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்தி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துள்ளார். நைனிதாலில் நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இது சாத்தியமில்லை என்றார். கடந்த 2004-ல் தேசிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் அரசு அமைத்தபோது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர்.
இடதுசாரிகள் அரசுக்கு வெளியே இருப்பதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்று சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. இக் கமிட்டியில் இடதுசாரிகள் சார்பில் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேசிய முற்போக்குக் கூட்டணியும் இடதுசாரிகளும் அடங்கிய ஒருங்கிணைப்புக் கமிட்டி என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. இக் கமிட்டியில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அடங்கிய இதர கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த சிலகாலமாகவே கோரி வருகிறது. கடந்த வாரம் டேராடூனில் நடந்த அக் கட்சியின் மாநாட்டில் இக் கோரிக்கை தீவிரமாக வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதியாக விளங்க முடியாது என்று அக் கட்சி கூறியது.
ஆனால் மன்மோகன் சிங் அரசை ஆதரிக்கிற கட்சிகள் பலவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும்போது அக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இடம்பெறத் தேவையில்லை என்பது காங்கிரஸின் வாதமாகும். எனினும் பல முக்கிய விஷயங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் அவை அமைச்சரவையின் முன் வைக்கப்படுகின்றன. அவ்வித நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு ஆலோசனைகள் நடைபெற வழியில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட சில முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அரசு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெய்வேலி நிறுவனப் பங்குகள் விவகாரத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம்.
எனினும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் ஒன்றுதான் தீவிரமாக வற்புறுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப்போல இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிற கட்சிகள் இக் கோரிக்கையை – குறைந்தபட்சம் பகிரங்கமாக எழுப்பவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக உள்ளது.
ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்துவது என்றால் அதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மன்மோகன் சிங் அரசை பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளும் உண்டு. இக் கட்சிகளில் யாரைச் சேர்த்துக் கொள்வது, யாரை விடுவது என்ற பிரச்சினை உள்ளது.
இடதுசாரிகளைப்போலவே தாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்பதால் தங்களையும் அக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதிக் கட்சியும் மாயாவதிக் கட்சியும் கோரினால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.
இடதுசாரிகளுடன் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சி வருந்தினாலும் வியப்பில்லை என்ற நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.
