Motivation to Achieving Achievements
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 31, 2006
சாதனை-சாதனையாளர்கள்
வி.எஸ். ஸ்ரீதரன்
இப்போதெல்லாம் அடிக்கடி “சாதனை’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மேடைகளிலும் சாதனையாளர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன.
சாதனை செய்யும் உணர்வு கீழ்க்கண்ட காரணங்களால் வரலாம்:
1. தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வு.
2. தன்னிடம் உள்ள கலை, அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் பிற திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற உந்துதல்.
3. சிலசமயங்களில் பிற சாதனையாளர்களால் உந்தப்பட்டு தானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுதல்.
4. வாழ்வின் லட்சியம் என்று தேடும்போது எதையாவது சாதிப்பது என்ற இலக்கை வைத்துக் கொள்வது.
5. எந்திரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாதனை என்று ஒன்றைச் செய்ய எண்ணும் மனப்போக்கு.
6. புகழின் மேல் உள்ள நாட்டம்.
7. சமூகத்துக்குத் தான் உபயோகமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம்.
8. தோல்விகளையும் தடங்கல்களையும் வென்று, பிரச்சினைகளோடு போராடி வாழ்க்கையில் – தொழிலில் – பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்.
ஆகவே, வெவ்வேறு காரணங்கள் சாதனைக்குப் பின்னணியாய் இருக்கக் கூடும். இயற்கை சிலருக்குச் சில கலைத்திறமைகளை அல்லது அனுகூலமான விஷயங்களைத் தந்திருக்கிறது. அதைக் கண்டறியும்போது, அவர்கள் அதில் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு அதுவே தொழிலாகவும் ஆகிப்போய் விடுகிறது. அதாவது, பொருளாதார பலமாகவும் ஆகிறது.
சாதனை உணர்வு மனிதர்களை ஆக்கபூர்வமானவர்களாகவும் படைப்பாளிகளாகவும் மாற்ற உதவுகிறது என்ற அளவில் சிறந்தது. அதேசமயத்தில் அதில் முழுவதும் தன்னைக் கரைத்துக் கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பேரும் புகழும் தாமாகவே தேடி வர வேண்டும். அவையே ஒருவரின் நோக்கமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகங்காரம் மிகுந்துவிடக் கூடாது.
சாதனையாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்பவர்கள் மேற்போக்காக அவர்களைப் பார்த்துத் தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்று நினைப்பது இயல்பே. ஆனால், அவர்கள் எத்தனை கசப்பான அனுபவங்கள் – உழைப்பு – தடைகள் – மேலும் பல சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் – நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிலர் அவர்கள் உண்டு – அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருப்பார்கள். அதில் சாதனை என்ன இருக்கிறது என்றுகூட நினைப்பார்கள். ஆனால் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வருபவர்களும் சாதனையாளர்கள்தான். புகழ் என்ற பெயரில் வெளிச்சத்துக்கு வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சில பிரபலமான சாதனையாளர்கள் கூடப் பேசும்போது, நான் சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்…. சிறந்த மனுஷியாக இருக்க வேண்டும்… என்று கூறுகிறார்கள். அவர்கள் துறையில் அவர்கள் சாதனை படைத்திருந்தாலும், அதைவிடப் பெரியதாக நல்ல மனிதனாக – நல்ல மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், சாதனையாளனாக இருப்பது வேறு; சிறந்த மனிதனாக இருப்பது வேறு.
ஒருகாலத்தில் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதிலாவது கவனம் செலுத்துவார்கள். சில படைப்பாளிகள் தங்களுடைய மிகச்சிறந்த படைப்பை இனிமேல்தான் தர வேண்டும் என்பார்கள்.
சில குடும்பங்களில் பல சவாலான சூழ்நிலைகளில் பெண்களும் ஆண்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காவும் தியாகங்களைச் செய்கிறார்கள் – உழைக்கிறார்கள் – சோதனைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். சிலர் பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவர்கள். சிலர் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று மற்றவர்களுடன் நட்பையும் உறவையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். வயதான காலத்தில் கூட சில அப்பாக்களும் தாத்தாக்களும் அம்மாக்களும் பாட்டிகளும் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கிறார்கள்; பிரச்சினைகளைத் தலையில் சுமக்கிறார்கள். அவர்கள் எல்லோருடைய பெருமையும் போற்றத்தக்கதுதான்.
ஆகவே, சாதனை என்பது தனிமனிதன் வாழ்விலும் குடும்ப வாழ்விலும்கூட நிகழக்கூடியதுதான். எனவே, வெளிச்சத்துக்கு வராதவர்கள்கூட அவரவர் வட்டத்தில் சாதனையாளர்கள்தான்.
இந்தச் சாதனைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு சாதனையைப் பற்றி நினைக்க வேண்டும். மனிதன் தன் மகிழ்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும், கூடியவரை உலக விஷயங்களால் பாதிப்பு அடையாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் அது வேறுவிதமான சாதனை. உலக விஷயங்கள் சம்பந்தப்பட்ட சாதனைகளில் நாட்டம் குறையக் குறைய – மெய்யறிவைப் பற்றிய நாட்டம் அதிகரிக்கும். அதுதான் மிகப்பெரிய சாதனையாய் இருக்கும். மனத்தை அடக்கி அமைதியை அனுபவிப்பது மாபெரும் சாதனை என்று ஞானிகள் கூறுகிறார்கள். “நான் இனிமேல் எதையும் அடையத் தேவை இல்லை’ என்னும் அளவுக்கு மனம் அமைதி அடைவதுதான் நிரந்தரமான சாதனை.
