Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Srilankan Army Attacks Mullai Theevu Orphanage

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 15, 2006

இலங்கைப் படை விமானம் குண்டுமழை: 61 அனாதை சிறுமிகள் பலி

முல்லைத்தீவில் உள்ள அனாதை இல்லம் மீது திங்கள்கிழமை இலங்கை படை விமானம் நடத்திய தாக்குதலில் பலியான சிறுமிகள்.

கொழும்பு, ஆக. 15: இலங்கையில் 24 மணி நேரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் 83 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். முல்லைத் தீவில்: முல்லைத்தீவு மாவட்டத்தின் அனாதை இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 61 மாணவிகள் அங்கேயே உடல் சிதறி இறந்தனர், 60 பேர் காயம் அடைந்தனர். திங்கள்கிழமை காலை இக் கொடூரத் தாக்குதல் நடந்தது.

கொழும்பில்: இச் சம்பவம் நடந்த 5 மணி நேரத்துக்கெல்லாம் தலைநகர் கொழும்பில், அதிபர் ராஜபட்சய இல்லத்துக்கு அருகில் கட்டுக்காவல் மிகுந்த வீதியில், ஆட்டோவில் இருந்த கண்ணிவெடி குண்டு வெடித்தது. அப்போது அந்தப் பக்கமாக காரில் சென்ற பாகிஸ்தான் தூதர் பஷீர் வாலி நூலிழையில் உயிர் தப்பினார். அவருக்குப் பின்னால் வந்த வாகனம் வெடித்துச் சிதறியது. அவருக்குக் காவலாக வந்த 4 கமாண்டோ வீரர்களும், சாலையில் அப்போது சென்றவர்களில் 3 பேரும் அங்கேயே இறந்தனர். இலங்கை ராணுவத்தின் 3 மெய்க்காவலர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்குகிறது பாகிஸ்தான். இதனால் ஆத்திரம் அடைந்து பாகிஸ்தான் தூதரை குறிவைத்து புலிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நடந்த லிபர்ட்டி பிளாசா இடத்துக்கு மிக அருகில் அதிபர் மகிந்த ராஜபட்சயவின் மாளிகை உள்ளது. இதே பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கியுள்ளனர்.

கெயிட்ஸ் தீவில்: யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள கெயிட்ஸ் தீவில் அலப்பிட்டி என்ற இடத்தில் புனித பிலிப் மேரி தேவாலயத்தின் மீது பீரங்கியால் சுட்டனர் இலங்கை தரைப்படையினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இத் தாக்குதலில் 15 பேர் இறந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்திரம்: தலைநகர் கொழும்பில் கண்ணிவெடி வெடித்த இடத்துக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்ததால் காலையில் விளையாட்டுப் பயிற்சிக்கு அவர்கள் வெளியில் செல்லவில்லை. குண்டு வெடித்தபோது அனைவரும் ஹோட்டல்களில்தான் இருந்தனர். பிற்பகலிலும் மழை தொடர்ந்ததால் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>