Mid-East Updates
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 3, 2006
![]() |
||||
| லெபனான் பிரதமர் | ||||
‘லெபனானில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’- லெபனான் பிரதமர்
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது முதல் இதுவரை லெபனானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்தையும் தாண்டியுள்ளதாக லெபனானின் பிரதமர் போவுட் சினியோரா தெரிவித்துள்ளார்.
மேலும் மூவாயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு பத்துலட்சத்துக்கும் அதிகாமான மக்கள்- அதாவது லெபனானின் மொத்த சனத்தொகையில் கால்வாசிப் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு, அவர் அனுப்பி வைத்த வீடியோ செய்தி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை ஒரு அவசர போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி, இஸ்ரேலால், லெபனானில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்று தம்மால் கூறப்படுபவை குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநாடு நிர்ப்பந்தித்துள்ளது.
மத்தியகிழக்கு மோதல் மேலும் வலுக்கிறது
![]() |
|
| மோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது |
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் பல நாட்களாக தணிந்திருந்த வான் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, சில மணிநேரங்களின் பின்னர், லெபனான் எங்கிலும் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை நட்த்தியுள்ளன.
வடக்கு லெபனானில் உள்ள ஒரு பாலம், கிழக்கில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு வீதி மற்றும் தெற்கு நகரான நபதியா ஆகியவையும் இலக்கு வைக்கப்பட்டன.
தெற்கில் உள்ள பகுதிகளில் தரை மோதலும் நடக்கிறது; அங்கு குறைந்தது 4 இடங்களில் ஹெஸ்பொல்லா கிளர்ச்சிக்காரர்களுடன், சுமார் பத்தாயிரம் இஸ்ரேலிய துருப்பினர் மோதலில் ஈடுபடுகின்றனர்.
தாங்கி எதிர்ப்பு சுடுகலன்களின் தாக்குதலில் தமது சிப்பாய்கள் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்குள் மேலும் ராக்கட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லாக்கள் அதில், குறைந்தது 5 பேரைக் கொன்றுள்ளனர்.
அமைதிக்கான இருகட்டத் திட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை ஆராய்கிறது
![]() |
|
| லெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது |
லெபனான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு கட்ட திட்டம் குறித்து, நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் ஆலோசித்து வருகிறார்கள்.
இடைக்கால போர் நிறுத்தம் ஒன்றை கோருவதற்கான தீர்மான பிரேரணை குறித்து, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு உடன்பாட்டை நெருங்கியுள்ளதாக இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.
ஒரு சர்வதேச அமைதிப்படையை அங்கு நிறுத்துவது உட்பட ஒரு நீண்டகால தீர்வு ஒன்றுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதே அதன் இரண்டாவது கட்டமாக இருக்கும்.
லெபனானின் உடனடி மோதல் நிறுத்தத்தை கோருவதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் குறித்த உடன்பாடு சில நாட்களில் ஏற்படக்கூடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 7 பேர் பலி
![]() |
|
| காசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம் |
காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
26 பேர் அதில் காயமடைந்துள்ளனர்.
ரபா நகருக்கு அருகில் இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
தாங்கி எதிர்ப்பு ராக்கட் ஒன்றை ஏவ முயற்சித்த ஒரு குழுவையும் தாம் தாக்கியதாகவும் அது கூறுகிறது.
ஜூன் மாத இறுதியில் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு இஸ்ரேலிய சிப்பாயை பிடித்துச் சென்றதை அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 35 சிறார்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.




